
புதிய ரூ. 2000, ரூ. 500 நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசிடமிருந்து 5 மாதங்களுக்கு முன்பாகவே அனுமதி பெறப்பட்டது என தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாவதற்கு 5 மாதங்களுக்கு முன், 2016,ஜூன் 7-ந்தேதி மத்தியஅரசு இந்த அனுமதியை அளித்துள்ளது.
நாட்டில் உள்ள கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ. 500 , ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் மாற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியாகி 50 நாட்களாக மக்கள் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் கடும சிரமத்துக்கு உள்ளாகினர்.
மத்தியஅரசின், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும், மக்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். திட்டமிடப்படாத அறிவிப்பு, எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி திடீரென அறிவித்துவிட்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு குறித்தும், ரூபாய் நோட்டு தடை குறித்த அறிவிப்பு எப்போது திட்டமிடப்பட்டது?, அறிவிப்பு வெளியிடும் முன் எத்தனை கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருந்தன ? என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் பலர் மனு செய்தனர். ஆனால், அது குறித்து தகவல் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்து வந்தது.
இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்று, ரூபாய் நோட்டு அறிவிப்பு எப்போது திட்டமிடப்பட்டது?, புதிய ரூ. 2000, ரூ.500 நோட்டுகள் அச்சடிக்க எப்போது அரசிடம் அனுமதி பெறப்பட்டது?, டிசைன் எப்போது அனுமதி அளிக்கப்பட்டது ? உள்ளிட்ட பல கேள்விகளை உள்ளடக்கி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு செய்யப்பட்டது.
அதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடுவதற்கு 5 மாதங்களுக்கு முன் 2016, ஜூன் 7ந்தேதி மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது, புதிய ரூபாய் நோட்டுக்கான வடிவமைப்புக்கு அனுமதி மே 19ந்தேதி பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிப்பது நாட்டின் இறையான்மைக்கும், ஒற்றுமை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றும் ஊறுவிளைவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.