
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் கேபினட் அங்கீகாரம் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலின்றி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஒப்புதல் இன்றி முடிவு
இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ் கூறியதாவது:-
1978-ம் ஆண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது அப்போதைய அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. பின்னர் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது கேபினட் ஒப்புதல் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் எதுவும் இன்றி தொலைக்காட்சி உரையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகத் தன்மை என்ன?
தொலைக்காட்சி அறிவிப்பின் மூலம் ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கி விடமுடியும் என்றால் இந்திய ரூபாய் நோட்டுகளின் நம்பகத் தன்மை என்ன என்ற கேள்வி எழுகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசு பதிவிக்காலத்தின்போது 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் செல்லாது என்று அறிவிக்க முடிவு செய்யப்படட்டது. அதை கேபினட் ஒப்புதல் பெற்ற பின்னரே அரசு செய்தது.
ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. மத்திய அரசு முறையான திட்டமிடல் இன்றி நடவடிக்கை எடுத்துள்ளதையே இது காட்டுகிறது.
தியாகிகளாக அறிவிக்க வேண்டும்
ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் நிற்பதை தேசப்பற்று என்று அரசு கூறினால், அதற்காக உயிரிழந்தவர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்.
2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது எதற்காக என்று தெரியவில்லை. திட்டத்தை செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ள அதே நேரம் முடிவு எடுக்கப்பட்டதிலும் தவறுகள் உள்ளன. இவ்வாறு மோகன் பிரகாஷ் கூறினார்.