"செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் கடனுக்கான இ.எம்.ஐ. குறையுமா...? வங்கியில் கடன் ஈஸியாக கிடைக்குமா...?

Asianet News Tamil  
Published : Nov 14, 2016, 10:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
"செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் கடனுக்கான இ.எம்.ஐ. குறையுமா...? வங்கியில் கடன் ஈஸியாக கிடைக்குமா...?

சுருக்கம்

பிரதமர் நரேந்திரமோடி ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாததாக அறிவித்ததற்கும், வங்கியில் நாம் பெற்ற கடனுக்கான இ.எம்.இ. குறையும் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் குழப்பமடையாதீர்கள். உண்மையில் நீண்ட காலத்தில் குறையத்தான்  போகிறது.

நாட்டின் பொருளாதார சக்கரத்தில் இந்த அறிவிப்பு குறுகிய காலத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தி நீண்ட காலத்தில் பொருட்களின் விலைஏற்றத்தையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தும்.

அதேசமயம், சாமானியர்களின் வாழ்க்கையில், கொஞ்ச நாட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும் அதில் மாற்றுக்கருத்தில்லை.  ஆனால், நீண்ட காலத்தில் பலன் நிச்சயம் உண்டு என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

 அதாவது, மக்கள் வங்கியில் பெற்ற வீட்டுக்கடன், வாகனக்கடன், நகைக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறையும், மாதந்தோறும் கட்டும் இ.எம்.ஐ. குறையும். தொழில்துறை வளர்ச்சி பெறும் என்கின்றனர்.

நாட்டில் உள்ள கருப்புப்பணத்தையும், கள்ள நோட்டுக்களையும ஒழிக்கும் நோக்கில், பிரதமர் மோடி, கடந்த 8ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என அறிவித்தார்.

அது முதல், மக்கள் தங்களிடமும் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற, வங்கிகளிலும், தபால்நிலையத்தின் வாசலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.  பிரதமர் மோடியின் இந்த தடாலடி அறிவிப்பு, அனைத்து தரப்பு மக்களின் கையில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மக்கள் முன்பைப்போல் தாராளமாக செலவு செய்யா முடியாததால், இயல்பாகவே அனைத்து உணவுப்பொ ருட்களின் விலையும் சரிவைச் சந்திக்கும். இதன் காரணமாக அடுத்துவரும் மாதங்களில் பணவீக்கம் படிப்படியாக குறையும்.

மக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ.1000 நோட்டுக்களை வங்கிகளில் தங்கள் கணக்குகளில் டெபாசி செய்து வருவதால், வங்களில் ரொக்க இருப்பு அதிகரிக்கும். மக்கள் தங்களின் நிலுவையில் உள்ள வரிகளையும் இந்த பணத்தின் மூலம் செலுத்தி வருவதால், அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்.

நாட்டில் தற்போது, புழக்கத்தில் உள்ள 17  லட்சடம் கோடி ரூபாயில், 85 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களாகும். இவை அனைத்தும் வங்கிகளுக்கு வந்துவிடும், டெபாசிட்கள் என்ற பெயரில் வங்கியில் மக்களின்  சேமிப்பு அதிகரிக்கும்.

பணவீக்கம் குறைவு, மக்கள் கையில் பணத்தட்டுப்பாடு, பொருளாதார சுணக்க நிலை ஆகியவை மிகக்குறுகிய காலத்துக்கு மட்டுமே ஏற்படும். அதன்பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிட, வங்கியில் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டு, கடன் எளிதாக்கப்படும். இதன் மூலம் வங்கியில் கடன் பெற்று இருந்தால் கடனுக்கான வட்டி குறையும். வங்கியில் கடன் பெற நினைப்போருக்கு கடன் கிடைப்பது எளிதாகும்.

இது குறித்து, ஆசியா கேப்பிடல் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் நாக்பால் கூறுகையில், பிரதமர் மோடியின் ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பால், நாட்டுமக்களின் பணப்புழக்கம் குறைந்து, வேறு வழியின்றி, பெரும் பகுதி மக்கள் மின்னனு பரிமாற்றத்தை நாடத் தொடங்குவர். இதன் மூலம் முறைப்படுத்தப்பட்ட, நிதிவழியை மக்கள் தேர்வு செய்யும் போது, படிப்படியாக பணவீக்கம் கட்டுக்குள் வந்து பொருட்கள் விலை குறையும், வங்கியில் கடனுக்கான வட்டியும் குறையும். பணத்தை ரொக்கமாக அத்தியாவசியப் செலவுக்காக மட்டுமே எடுப்பார்கள். அனைத்துக்கும் மின்னனு பரிமாற்றத்தை நாடுவார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் ரிசரவ் வங்கியில் புதிய கவர்னர் உர்ஜித் படேல் யாரும் எதிர்பாரா வகையில், கடனுக்கான வட்டி வீதத்தை 0.25 புள்ளிகள் வரை குறைத்தார். தற்போதுள்ள பணப்புழக்க தட்டுபாடு, அதனால் உண்டாகும் பணவீக்கம் குறைவு காரணமாக, வரும் டிசம்பர் 7-ந்தேதி மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.   அடுத்த 18 மாதங்களில் ஏறக்குறைய 1.50 சதவீதம் வட்டி குறைக்கப்படலாம் என நாக்பால் தெரிவிக்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், நாட்டு மக்களின் சேமிப்பு அளவு அவர்களை அறியாமலே வங்கியில்  உயரக்கூடும். தற்போதுள்ள நிலை நீடித்தால் பொருளாதார வல்லுநர்களின் கணக்குப்படி, நாட்டு மக்களின் சேமிப்பு கணக்கு குறைந்தபட்சம் ரூ. 4 முதல் ரூ.5லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

வங்கியில் சேமிப்பு இயல்பாக அதிகரிக்கும் போது, வட்டி வீதம், கடனுக்கான வட்டி அடுத்தடுத்து குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வங்கிகள் தள்ளப்படும். அப்போது மக்களுக்கு கடன் எளிதாக கிடைக்கும். அதன் மூலம் மீண்டும் பொருளாதாரச் சக்கரம் வேகமெடுக்கும்.

மக்கள் கையில் தற்போது பணப்புழக்கம் குறுகிய காலத்துக்கு சுருங்கிவிட்டதை நினைத்தும், நம் பணத்தை நம்மால் எடுத்து அவசரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை என்பதை வருந்தியும்,  அனைத்திலும் மோடி அரசு கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது என  புலம்ப வேண்டாம்.

பொருளாதார ரீதியாக பார்க்கும் போது பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நாட்டு மக்களுக்கு கொஞ்ச காலத்துக்கு தொந்தரவையும், சவுகரியக் குறைவையும் கொடுத்தாலும், நீண்ட காலத்தில்  செயற்கையான விலை உயர்வை மக்கள் எதிர்நோக்க மாட்டார்கள். பொருளாதார வளர்ச்சி  தற்போது குறுகிய காலத்துக்கு இறுக்கிப்படித்தாலும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் வேகமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான பணம் மட்டுமே இந்த நடவடிக்கையால் இருக்கும். தேவையில்லாத பணம், அதாவது, கள்ள நோட்டு, கருப்பு பணம் தானாகவே வடிகட்டப்படும். அதனால், அடுத்து வரும் மாதங்களில் பொருளாதாரம் எனும் சக்கரம் லகுவாக சுழல இந்த நடவடிக்கை நிச்சயம் துணைபுரியும்.

PREV
click me!

Recommended Stories

Grok AI வச்சு இப்படியா பண்ணுவீங்க? எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு விதித்த 72 மணி நேர கெடு!
பீச்சுக்கு வர்றது காத்து வாங்கவா.. இல்ல ஷாப்பிங் பண்ணவா? மெரினா கடைகளுக்கு 'செக்' வைத்த நீதிபதிகள்!