
டெல்லியில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் திடீரென சுவற்றில் மோதி விபத்தில் சிக்கியதால், டெல்லி மாநில அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஆள் இல்லா ரெயிலை வரும் 25-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சுரங்கப்பாதை மூலம் டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, கல்காஜி மந்திர் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி வரும் 25-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், இந்த ஆள் இல்லா மெட்ரோ ரெயில் சேவை நேற்று சோதனை ஓட்டம் நிகழ்த்தி பார்க்கப்பட்டது.
அப்போது, மாலையில் திடீரென மெட்ரோ ரெயில் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றை உடைத்துக் கொண்டு சென்று நின்று விபத்துக்குள்ளானது. ரெயிலை பின்புறமாக இயக்கியபோது, திடீரென பிரேக் செயல்படாத காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆள் இல்லா ரெயில் இயக்கப்படுவதற்கு 6 நாட்கள் முன்னதாக இந்த விபத்து நடந்துள்ளது பயணிகளின் பாதுகாப்பை, பெரும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் முழுவதும் சிக்னல் அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் இயக்கும் டிரைவர்கள் இருந்தாலும், முழுமையாக தானியங்கி மூலமே செயல்படும். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது, டிரைவர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்.
இந்த மெட்ரோ ரெயில் விபத்து குறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறுகையில், “ டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் விபத்தில்சிக்கியது அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து விரிவான அறிக்கை கேட்டு மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இயக்குநர் அனுஜ் தாயல் கூறுகையில், “ ஆள் இல்லா மெட்ரோரெயில் பராமரிப்பின் போது விபத்தில் சிக்கியுள்ளது. அதன் பிரேக்குகள் சரிவர இயங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தபின், பிரேக்குகளை சோதிக்காமல்இயக்கியதே விபத்துக்கு காரணம் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.