
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நாளுக்கு நாள் பிளவு அதிகரித்து வருகிறது. முன்னாள் தலைவர்கள் சரத் யாதவ், அலி அன்வர் எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவித்து, தனது மாநிலங்கள் அவை எம்.பி. பதவியை வீரேந்திர குமார் இன்று ராஜினாமா செய்தார்.
80 வயதான வீரேந்திர குமார் கேரள மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் எம்.பி. யாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.ஆனால், ஐக்கிய ஜனதா தலைவர்கள் சரத் யாதவ், அலி அன்வர் கட்சி விரோதமாக செயல்பட்டதால், எம்.பி. பதவியை நிதிஷ் குமார் பறித்ததை வீரேந்திர குமார் கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, மாநிலங்கள் அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடிதத்தை ஒப்படைத்தார்.
பீகாரில், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சியுடன், மாகா கூட்டணி அமைத்து, நிதிஷ் குமார் தலைமயைிலான ஐக்கிய ஜனதா தளம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. அதில் அமோக வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சியில் நிதிஷ் குமார் முதல்வரானார். ஆனால், லாலு பிரசாத் மகன் ஊழல் குற்றச்சாட்டை காரணமாக வைத்து, ஆட்சியைக் கலைத்த நிதிஷ் குமார், பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்து செயல்பட்டுவருகிறார். இதனால், அதிருப்தி அடைந்த மூத்த தலைவர் சரத் யாதவ், அலி அன்வர், கட்சி தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தனர். கட்சி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி இருவரின் எம்.பி. பதவியையும் நிதிஷ் குமார் பறித்தார். இதை மாநிலங்கள் அவை தலைவர் வெங்கையா நாயுடும் ஏற்றுக்கொண்டார்.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், இப்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் வீரேந்திர குமார் தனது மாநிலங்கள் அவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்து இருப்பது மேலும் பிளவை அதிகரித்து இருக்கிறது.