
குஜராத் தேர்தலில் பாகிஸ்தானுடன் சேர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சதி செய்தார் என்று பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்கள் அவையும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
குஜராத் தேர்தல்பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “ சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் இல்லத்தில், பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் தூதர்கள், அதிகாரிகள், பத்திகையாளர்கள் ஆகியோர் 3 மணி நேரம் ஆலோசித்து, பாகிஸ்தானுடன் சேர்ந்து குஜராத் தேர்தலுக்கு எதிராக சதி செய்தனர்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக கண்டனம் தெரிவித்து, தாங்கள் எதற்காக கூடினோம் என்ற விவரத்தையும் ஆதாரங்களோடு வெளியிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடிய விவகாரம் நாடாளுமன்றம் கூடியதில் இருந்து எதிரொலித்து வருகிறது. தான் முன்னாள் பிரதமர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமளி இன்றும் எதிரொலித்தது.
மக்களவை கூடியதும், காங்கிரஸ் எம்.பி.க்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது பிரதமர்மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க கோரி அமளியில் ஈடுபட்டு, கோஷங்களை எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்குவந்து எம்.பி.க்கள் தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பியதால், அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்கள் அவையிலும் இதைநிலைதான் நீடித்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழுக்கமிட்டனர். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கக் கோரி வலியுறத்தினர்.
அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பி.க்கள் கூச்சலிடுவதை கண்டித்து இருக்கையில் அமரும்படி பலமுறை கேட்டுக்கொண்டார். ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். பிரதமர் மோடி பேசியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு அனுமதி மறுத்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, மற்ற முக்கிய பிரச்சினைகள் நிலுவையில் இருக்கும் போது, இதை விவாதிக்க அனுமதிக்க முடியாது, மற்ற எம்.பி.க்கள் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். காங்கிரஸ் எம்.பி.க்கள் அனுகுமுறை தவறானது. மாநிலங்கள் அவை, தவறான முன் உதாரணத்தை கூறக்கூடாது. வரம்பு மீறி செல்கிறீர்கள் எம்.பி.க்கள் இருக்கையில் அமருங்கள் என கேட்டுக்கொண்டார்.
ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.