Corona : கவலைக்குரிய மாநிலங்களில் தமிழகம்.. ஆனாலும், குட்நியூஸ் சொன்ன மத்திய அரசு..!

By vinoth kumarFirst Published Jan 13, 2022, 10:38 AM IST
Highlights

இந்தியாவில் டிசம்பர் 30ம் தேதி 1.1% ஆக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 11.5% ஆக அதிகரித்துள்ளது. 300 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கவலைக்குரிய மாநிலங்களாக மாறி வருகின்றன.

கொரோனா தொற்று பரவலில் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, கர்நாடகா, உத்தர பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகியவை கவலைக்குரிய மாநிலங்களாக உருவெடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்தியாவில் ஒமிக்ரான் எனும் திரிபு பரவ ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தையும், ஒமிக்ரான் பாதிப்பு ஐந்து ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லாவ் அகர்வால்;- இந்தியாவில் டிசம்பர் 30ம் தேதி 1.1% ஆக இருந்த கொரோனா பாதிப்பு விகிதம் நேற்று 11.5% ஆக அதிகரித்துள்ளது. 300 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது. 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கவலைக்குரிய மாநிலங்களாக மாறி வருகின்றன.

மகாராஷ்டிராவில் டிசம்பர் 22ம் தேதி 0.87%ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 22.39% ஆகவும், மேற்கு வங்கத்தில் 1.52%இல் இருந்து 32.18% ஆகவும் அதிகரித்துள்ளது. அதுபோன்றுதான் தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் எட்டு மாநிலங்களில், எந்தவொரு மாநிலமும் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை. ஒமிக்ரான் மாறுபாட்டால் அதிகரித்த கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தியாவில் தற்போதுவரை 4,868 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 1,281 பேரும், டெல்லியில் 546 பேரும், கர்நாடகாவில் 479 பேரும், கேரளாவில் 350 பேரும், மேற்கு வங்கத்தில் 294 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 275 பேரும், குஜராத்தில் 236 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் குணமடைந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. இங்கு யாரும் ஒமிக்ரான் சிகிச்சையில் இல்லை. ஒமிக்ரான் பரிசோதனையும் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என  லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

click me!