பஞ்சாப்பில் கொத்தாக தொகுதிகளை அள்ள கெஜ்ரிவால் திட்டம்... திமுக தேர்தல் அறிக்கையை கையில் எடுத்த ஆம் ஆத்மி.!

By Asianet TamilFirst Published Jan 12, 2022, 10:24 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதுபோலவே ஆம் ஆத்மியும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது .

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததைப் போல பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தால் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் சட்டப்பேரவைக் காலம் முடிய உள்ள நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ், ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் காங்கிரஸை விட்டு வெளியேறி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். இதனால், அக்கூட்டணியும் பஞ்சாப்பில் அதிர்வலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதேபோல அகாலிதளமும் ஆட்சியைக் கைப்பற்றும் உத்திகளைக் கையாண்டு வருகிறது.

 

இந்த எல்லா கட்சிகளுக்கும் போட்டியாக ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. மேலும் டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி தீவிரமாக களமிறங்கியுள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்க பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி வீசி வருகிறது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கெனவே பஞ்சாப்புக்கு வந்த போது, “பஞ்சாப்பில் ஆம் ஆத்மி  ஆட்சியைப் பிடித்தால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 வழங்கப்படும். ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும். 18 வயதைத் தாண்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தத் தொகை செலுத்தப்படும்” என்று அதிரடித்திருந்தார் கெஜ்ரிவால்.

இந்நிலையில் சண்டிகரில் அரவிந்த கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பஞ்சாப் வளர்ச்சியும் வளமும் பெற 10 அம்ச பஞ்சாப் மாடல் என்ற திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வேலை தேடி கனடாவுக்கு சென்றவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள். போதை கூட்டணியை உடைப்பதுடன், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் மொகல்லா கிளினிக் அமைத்து அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம். எல்லா நாட்களிலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ. ஆயிரம் நிதியுதவி வழங்குவோம்.” என்று அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அதுபோலவே ஆம் ஆத்மியும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!