விவசாயிகளை அடைக்க திறந்தவெளி சிறைச்சாலை: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி அரசு!

By Manikanda Prabu  |  First Published Feb 13, 2024, 1:15 PM IST

பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது


விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கு விவசாயிகளின் போராட்டம் நீடித்த நிலையில், தற்போது மீண்டும் போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதற்காக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தங்களது ஊர்களில் இருந்து ட்ராக்டர்களில் புறப்பட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அதனை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் ஹிசாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம்: நெட்டிசன்கள் கேள்வி!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான பல மெட்ரோ ரயில் நிலையங்களில் வாயில்கள் மூடப்பட்டுள்ளது. வழக்கமான மெட்ரோ ரயில் சேவை எந்தவித பாதிப்புகளும் இன்றி  இயங்கி வருவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைப்பது தொடர்பான மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக விவசாயிகள் வரத்தொடங்கிய நிலையில், பேரணியை மேற்கோள்காட்டி பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.

விவசாயிகளைக் கைது  செய்வது தவறானது என கூறி மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நிராகரித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அவர்களின் அரசியல் சாசன உரிமை எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளின் மீதான காவல்துறையின் முதல் தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. ஷம்பு எல்லை பகுதி வழியாக டெல்லிக்குள் நுழைய முற்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், தாக்குதலையும் மீறு விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.

click me!