தினேஷ் அரோரா மற்றும் ராகவ் மங்குடா ஆகியோர் டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மறுநாள் இந்த சோதனை நடக்கிறது.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக இந்த சோதனைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சய் சிங்கின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் தினேஷ் அரோரா மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி எம்பி மகுண்டா ரெட்டியின் மகன் ராகவ் மங்குடா ஆகியோர் டெல்லி மதுக்கொள்கை ஊழல் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மறுநாள் இந்த சோதனை நடக்கிறது.
undefined
பணமோசடி வழக்கில் ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட அரோரா அளித்த வாக்குமூலங்கள், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைக் கைது செய்ததில் முக்கியப் பங்காற்றின. இதேபோல தினேஷ் அரோரா சிபிஐ வழக்கிலும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய ரெய்டு குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி மதுக்கொள்கையை ஊழலில் சஞ்சய் சிங் பங்கு வகித்தது குறித்த ஆதாரங்களுக்காக தேடுதல்கள் நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சஞ்சய் சிங்கின் கட்சி சகாவும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, இதே மதுக்கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிசோடியா சென்ற பிப்ரவரி 26ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28ஆம் தேதி டெல்லி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.