டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வருகிற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறை சென்று அண்மையில் ஜாமீன் வெளியே வந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மோசமாக நடத்தப்படுகிறார். கிரிமினல் குற்றவாளியைவிட மோசமாக நடத்தப்படுகிறார். ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு கூட அவரது மனைவியையும், வழக்கறிஞரையும் வராண்டாவில் வைத்து சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், கண்ணாடி தடுப்பின் பின்னால் இருந்தே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.” என்றார்.
சிறையில் தனக்கு அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுவதாக வேதனையுடன் பகவத் மானிடம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாக கூறிய சஞ்சய் சிங், ‘என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால்; நான் தீவிரவாதி அல்ல’ என சிறையில் இருந்து மக்களுக்கு வேதனையுடன் செய்தி ஒன்றை அவர் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னதாக, ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திகார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்து பேசினார். மேலும், சிறையில் கடும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதல்வர் ஜெஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் ஒரு தீவிரவாதியை போன்று நடத்தப்படுவதாகவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றம் சாட்டினார்.
விவிபேட் ஒப்புகை சீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்; ஏப்ரல் 18க்கு தள்ளி வைப்பு!
ஆனால், சிறையில் எந்தவித பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர். ஒவ்வொரு சிறைக் கைதிக்கும் அவர்களுக்கான உரிமை வழங்கப்படும். அது உறுதி செய்யப்படும் என சிறைத் துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பனிவால் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் அவருக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.