
மான நஷ்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது அருண்ஜெட்லி பல முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாகவும், இதற்கு நஷ்ட ஈடு கோரியும் மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இரண்டாவது வழக்கில் அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டுக்கு உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்த டெல்லி உயர் நீதிமன்றம் அதற்கான இறுதி கெடுவையும் விதித்திருந்தது. ஆனால், அந்த கெடு தேதிக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.