
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் காயமடைந்தவர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அதாவது குன்டு வெடிப்பில் காயம் அடைந்த லுக்மான் (50) மற்றும் வினய் பதக் (50) என இருவர் சசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பை நடத்தியவர் டாக்டர் உமர் உன் நபி என்பதை, தடயவியல் டிஎன்ஏ பரிசோதனையில் அவரது உயிரியல் மாதிரி அவரது தாயின் மாதிரியுடன் பொருந்தியதுக்குப் பிறகு டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியது. இருப்பினும், அல்-ஃபலா பல்கலைக்கழகம் டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முஜாமில் ஆகியோரிடமிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் அவர்களின் அதிகாரப்பூர்வ பணிகளைத் தாண்டி பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், சந்தேகத்திற்கிடமான எந்த இரசாயனமோ அல்லது பொருளோ பல்கலைக்கழக வளாகத்தில் பயன்படுத்தப்படவில்லை அல்லது சேமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
பயங்கரவாதக் குழு குறித்து தீவிர விசாரணை
செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய வெடிபொருள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்றதாக பாதுகாப்பு அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட டாக்டர் உமர் உன் நபியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாதக் குழு குறித்து என்ஐஏ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சிக்னல் குழுவை உருவாக்கிய உமர்
உமர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட பெயரைப் பயன்படுத்தி ஒரு சிக்னல் குழுவை உருவாக்கியுள்ளார். இந்த மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்பு தளத்தில் முஜாமில், அடீல், முசாஃபர் மற்றும் இர்ஃபான் ஆகியோரை அவர் சேர்த்துள்ளார். இது உள் ஒருங்கிணைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.