
பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர், ஆறு மாத காலத்திற்கு 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட ரூ. 32 கோடியை இழந்துள்ளார். சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்த மோசடிக் கும்பல், அவரைத் தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைத்து, 187 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தைப் பெற்றுள்ளனர்.
இந்த மோசடி செப்டம்பர் 2024-இல் தொடங்கியது. ஒரு தனியார் கொரியர் நிறுவன (DHL) ஊழியர் என்று கூறிக்கொண்டு ஒரு நபர் அப்பெண்ணைத் தொடர்புகொண்டார். மும்பையின் அந்தேரி மையத்தில் அவருடைய பெயரில் வந்த ஒரு பார்சலில், மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருள் இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த பார்சலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்தப் பெண் கூறியபோதும், அவரது தொலைபேசி எண் பார்சலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு "சைபர் கிரைம்" விவகாரமாக மாற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
பின் சி.பி.ஐ. அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர் போனில் பேசியுள்ளார். அவர், "அனைத்து ஆதாரங்களும் உங்களுக்கு எதிராக உள்ளன" என்று அப்பெண்ணை அச்சுறுத்தியுள்ளார். மோசடி கும்பல், குற்றவாளிகள் அவருடைய வீட்டைக் கண்காணித்து வருவதாகக் கூறி, காவல்துறையை அணுக வேண்டாம் என எச்சரித்தது. தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும், மகன் திருமணத்திற்காகவும் பயந்த அந்தப் பெண், அவர்களின் அனைத்து அறிவுறுத்தல்களுக்கும் இணங்கினார்.
அவர் இரண்டு ஸ்கைப் (Skype) ஐடிகளை நிறுவி, மே மாதம் வரை தொடர்ச்சியான வீடியோ அழைப்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். மோஹித் ஹண்டா மற்றும் ராகுல் யாதவ் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர். மூத்த சி.பி.ஐ. அதிகாரி என்று நடித்த பிரதீப் சிங் என்பவர், தனது "நிரபராதித்துவத்தை நிரூபிக்க" அப்பெண்ணை மேலும் வற்புறுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 22 வரை, அந்தப் பெண் தனது நிதி விவரங்கள் அனைத்தையும் மோசடி கும்பலிடம் வெளிப்படுத்தினார். மேலும், "உறுதித் தொகை" என்று கூறி ரூ. 2 கோடி, அதைத் தொடர்ந்து "வரிகள்" என்ற பெயரில் பல தொகைகளை அனுப்பினார். பாதிக்கப்பட்டவர் தனது நிலையான வைப்புத்தொகைகளை (Fixed Deposits) உடைத்து, பிற சேமிப்புகளைப் பணமாக்கி, மோசடி ஆசாமிகளின் அறிவுறுத்தலின் பேரில் 187 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தமாக ரூ. 31.83 கோடியை மாற்றியுள்ளார்.
பணம் சரிபார்ப்புக்குப் பிறகு பிப்ரவரி 2025-க்குள் திருப்பித் தரப்படும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைத்துள்ளனர். அவரது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு முன் போலியாக ஒரு அனுமதி கடிதத்தை (Clearance Letter) வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மிரட்டலால் அந்தப் பெண் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, ஒரு மாதம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்தது. டிசம்பருக்குப் பிறகு, மோசடி ஆசாமிகள் பணத்தைத் திரும்பத் தராமல் மார்ச் வரை இழுத்தடித்தனர். அதுவரை "செயலாக்கக் கட்டணங்கள்" (Processing Charges) செலுத்த வேண்டும் என்று கூற பணம் பறித்துள்ளனர். அதன் பிறகு அவர்ள் தொடர்புகொள்வது திடீரென்று நின்றுவிட்டது.
மகனின் திருமணம் ஜூன் மாதம் முடிந்த பிறகுதான் அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இறுதியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். தனது புகாரில், "மொத்தம் 187 பரிவர்த்தனைகள் மூலம், நான் தோராயமாக ரூ. 31.83 கோடியை இழந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அதிநவீன மோசடிக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.