
செங்கோட்டை அருகே ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பலியாகினர், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்திற்குள் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு, மற்றும் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டது ஆகியவற்றிலிருந்து அதிர்ச்சி அளிக்கும் பயங்கரவாத நெட்வொர்க்கை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் ப்ராக்ஸி அமைப்புகள் இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்குள்ளேயே இயங்கும் உள்நாட்டு ஒயிட் காலர் பயங்கரவாதப் பிரிவுகளை உருவாக்க முயற்சி செய்கின்றன எனத் தெரியவந்துள்ளது.
இந்த பயங்கரவாத நெட்வொர்க்கைச் சேர்ந்த நபர்கள் நாட்டின் முக்கிய நகரங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குள் இருக்கலாம் என உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கண்காணித்து வரும் பாதுகாப்பு விவகார நிபுணர் மேஜர் ஜெனரல் சுதாகர் ஜீ (Sudhakar Jee), இந்தியா ஒரு ஹைபிரிட் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது எனக் கூறுகிறார். இது டிஜிட்டல் தொழில்நுட்பமும் வெளிநாட்டு சதியும் இதனை ஒருங்கிணைக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
"ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் ப்ராக்ஸி அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் வழியாக இந்தியாவில் ஹைபிரிட் ஒயிட் காலர் பயங்கரவாத நெட்வொர்க்குகளை உருவாக்க முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன." என்று அவர் தெரிவிக்கிறார்.
வங்கதேசத்தின் எல்லைப் பகுதியில் இருக்கும் மேற்கு வங்கம் இதனால் முதலில் பாதிக்கப்படக்கூடிய மாநிலமாக இருக்கலாம் என்று அவர் கவலை தெரிவிக்கிறார். வங்கதேசத்தில் ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) ஏற்கனவே தங்கள் நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தியுள்ளதால், மேற்கு வங்காளத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் மற்றும் நிறுவனங்களை அவர்கள் குறிவைக்கலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
வருங்காலத் தாக்குதல்கள் வழக்கமான பயங்கரவாதத் தாக்குதல்கள் போல இருக்காது என்று மேஜர் ஜெனரல் ஜீ வாதிடுகிறார்.
இந்தியாவின் முன்னேற்றத்தைக் குலைத்து, அது உலக வல்லரசாக மாறுவதைத் தாமதப்படுத்துவதே அவர்களின் அடிப்படை நோக்கம் என்றும் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து நெட்வொர்க்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மற்றும் இந்தியாவின் மக்கள்தொகை ஆகியவற்றை அவர்கள் குறிவைக்கலாம் என அவர் எச்சரிக்கிறார்.