
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லி குன்டு வெடிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பலியான அப்பாவி உயிர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைச்சரவை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்பாவி உயிர்களைப் பறித்த இந்தகொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலைஒருமனதாகக் கண்டித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தத் தீர்மானத்தை வாசித்தார். அந்த தீர்மானத்தில்
''அப்பாவி உயிர்களைப் பறித்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை ஒருமனதாகக் கண்டிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சரவை தனது ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது.
மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய அமைச்சரவை பிரார்த்திக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்கி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவசரகாலப் பதிலளிப்புக் குழுவினரின் உடனடி முயற்சிகளைப் பாராட்டுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
ஆதரவு தெரிவித்த உலக நாடுகளுக்கு பாராட்டு
மேலும் 'பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது. டெல்லி குண்டுவெடிப்புக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களிடமிருந்து கிடைத்த ஒற்றுமை மற்றும் ஆதரவு அறிக்கைகளுக்கும் அமைச்சரவை பாராட்டுகிறது.
குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்
சவாலான நேரத்தில் தைரியத்துடனும் இரக்கத்துடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு முகமைகள் மற்றும் குடிமக்களின் சரியான நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த பதிலை அமைச்சரவை பாராட்டுகிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் ஆழ்ந்த பாராட்டுக்குரியது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை மிகவும் அவசரத்துடனும் தொழில்முறையுடனும் மேற்கொண்டு, குற்றவாளிகள், அவர்களது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் மிக விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்' என்றும் தீர்மானத்தில் கூறப்படுள்ளது.