
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் உளவுத்துறை விசாரசையில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் உமர், முஸம்மில் மற்றும் ஷாஹீன் ஆகியோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி கிடைத்திருப்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இந்தத் தொகை ஒரு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் ஹவாலா நெட்வொர்க் மூலம் அனுப்பப்பட்டிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியில் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கு 26 குவிண்டால் NPK உரம் வாங்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் கொண்ட இந்த ரசாயன கலவை வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் பயன்படும்.
டாக்டர் உமர்-உன்-நபிக்கும் டாக்டர் ஷாஹீனும் இடையே நிதியைக் கையாள்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாக்டர் முஸம்மில் சம்பந்தபட்ட தகவல்களும் இந்தச் சதித்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டதை உறுதிசெய்துள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மூன்று 9mm ரகத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை பாதுகாப்புப் படையினரால் மட்டுமே பயன்படுத்தப்படுபவை. இந்தத் தோட்டாக்கள் பொதுமக்கள் வைத்திருக்கத் தடை செய்யப்பட்டவை என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தோட்டாக்கள் மீட்கப்பட்டாலும், துப்பாக்கியோ அல்லது அதன் பாகங்களோ சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் தோட்டாக்கள் சம்பவ இடத்திற்கு எப்படி வந்தன, இவற்றை பயங்கரவாதிகள் பயன்படுத்தினார்களா என்பதை அறிய விசாரணை நடைபெறுகிறது.
ஃபோரென்சிக் டிஎன்ஏ சோதனை மூலம், குண்டு வெடிப்பை நடத்தியவர் டாக்டர் உமர்-உன்-நபி தான் என்று டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் எட்டு பேர் நான்கு இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் தயாராக இருந்ததாகவும் விசாரணையில் தெரிந்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில், ஏற்கனவே முந்தைய பயங்கரவாத வழக்குகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் டாக்டர் அதீல் அஹ்மத் ராதர், டாக்டர் முஸம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை சனிக்கிழமை, இந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக புதிய FIR பதிவு செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட டாக்டர் உமர் மற்றும் டாக்டர் முஸம்மில் ஆகியோருடன் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்கள் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய எந்த ரசாயனப் பொருளையும் பயன்படுத்தவோ சேமிக்கவோ இல்லை என அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம் கூறிள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நௌகாம் காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட விபத்தில் ஒன்பது காவலர்கள் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஃபரிதாபாத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.