மத்திய அமைச்சர், பாஜக எம்.பி. பிரச்சாரம் செய்யத் தடை: டெல்லி தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

By Asianet TamilFirst Published Jan 30, 2020, 7:08 PM IST
Highlights

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இவர்கள் இருவரும் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புகாரளித்தன. 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் மற்றும் எம்.பியின் பெயர்கள் தேர்தல் பிரசார பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.ெடல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. 11ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவும் கடும் போட்டியின் காரணமாக கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்கிறது.

டெல்லியின் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில், மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் பங்கேற்று பேசுகையில், 'தேசத் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்' என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இதேபோல் டெல்லியின் ஷாஹீன் பாகில் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து பாஜக மக்களவை எம்.பி. பர்வேஷ் வர்மாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இவர்கள் இருவரும் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புகாரளித்தன. தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக,  அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மாவின் பெயர்கள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களுக்கான தேர்தல் பிரசார பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.அடுத்த உத்தரவு வரும் வரை அவர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!