
நமது நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு என்பது தீராத தலைவலியாக இருந்து வருகிறது. மாநில அரசுகள் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் காற்று மாசுபாடு குறைந்தபாடில்லை. அதுவும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசுபாடு உச்சம்தொட்டு மக்கள் மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்பட்டனர். இதனால் பசுமை தீர்ப்பாயமும், மாநில அரசும் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க அதிரடியாக தடை விதித்தது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பொதுமக்களும், பட்டாசு தொழில்துறையினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிகம் காற்று மாசுபாடு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளித்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வெடிக்க அனுமதி
அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்று ஆகிய இரண்டு நாட்களில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கலாம் என்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல்வர் ரேகா குப்தா வரவேற்பு
பசுமைப் பட்டாசுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் முடிவை டெல்லி முதல்வர் ரேகா குப்தா வரவேற்றுள்ளார். இது டெல்லி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அவர் கூறினார்.
"பாரம்பரியங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.
டெல்லி மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளது
இந்த முடிவு டெல்லி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. இந்த பண்டிகையைக் கொண்டாடும்போது டெல்லி மக்களும் அரசாங்கமும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். உச்ச நீதிமன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.