
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவத்தின் தயார்நிலையை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. அவசரகால கொள்முதல் (Emergency Procurement - EP) முறையின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ₹1,981.90 கோடி ஆகும். இது இந்திய ராணுவத்திற்கு அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த ₹2,000 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக முடிக்கப்பட்டுள்ளது.
அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் விரைவான நடைமுறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த கொள்முதல், பயங்கரவாத எதிர்ப்பு சூழல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் சூழ்நிலை விழிப்புணர்வு, தாக்குதல் திறன், இயக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான திறன் அதிகரிப்பை உறுதி செய்வதற்காக இந்த கொள்முதல்கள் குறைந்த கால அவகாசத்தில் முடிக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்படும் முக்கிய உபகரணங்கள்:
ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் தடுப்பு அமைப்புகள், குறைந்த உயர இலகுரக ராடர்கள், மிகக் குறைந்த தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ரிமோட் மூலம் இயக்கப்படும் வான்வழி வாகனங்கள், உலா வரும் ஆயுதங்கள் (Loitering Munitions), செங்குத்தான டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் அமைப்புகள் ஆகியவை இந்த ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்பட உள்ளன.
மேலும், பல்வேறு வகையான ட்ரோன்கள், குண்டு துளைக்காத கவசங்கள் (Bullet Proof Jackets), பாதுகாப்பு ஹெல்மெட்கள் (Ballistic Helmets), விரைவு எதிர்வினை சண்டை வாகனங்கள், கனரக மற்றும் நடுத்தர துப்பாக்கிகளுக்கான இரவு பார்வை உபகரணங்கள் (Night Sights for Rifles) ஆகியவை உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட இருக்கின்றன.
பாதுகாப்பு சவால்கள்:
இந்த கொள்முதல்கள், இந்திய ராணுவத்திற்கு நவீன, பணிக்கு அவசியமான மற்றும் முழுமையான உள்நாட்டு அமைப்புகளை வழங்குவதன் மூலம் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள அமைச்சகத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. அவசரகால கொள்முதல் பாதை, அவசர திறன் இடைவெளிகளைக் குறைப்பதிலும், அத்தியாவசிய செயல்பாட்டு உபகரணங்களை சரியான நேரத்தில் சேர்ப்பதிலும் ஒரு முக்கிய காரணியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.