
டென்மார்க்கை சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், தங்கள் முன்னணி உடல் பருமன் குறைப்பு மருந்தான 'வெகோவி'யை (Wegovy - Semaglutide) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை நோவோ நோர்டிஸ்க் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் விக்ராந்த் ச்ரோத்ரியா செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டார்.
வெகோவி யாருக்கு?
வெகோவி (Wegovy) என்பது வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் GLP1 ரிசெப்டர் அகோனிஸ்ட் வகை ஊசியாகும். இந்தியாவில், உடல் பருமன் கொண்ட பெரியவர்கள், நாள்பட்ட உடல் பருமன் பிரச்சினை கொண்டுவர்களுக்கு உடல் எடையை பரிமாரிக்கும் சிகிச்சை அளிக்க இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
செமாக்ளூடைடு (Semaglutide) என்ற முக்கிய மூலப்பொருளைக் கொண்ட வெகோவி, ஒரு வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய புதிய எடை குறைப்பு ஊசி. இது நீண்ட கால எடை மேலாண்மைக்கு உதவுகிறது. ஏற்கனவே, செமாக்ளூடைடின் குறைந்த அளவு மருந்தானது 2022ஆம் ஆண்டு முதல் 'ரைபெல்சஸ்' (Rybelsus) என்ற பெயரில் மாத்திரை வடிவில் இந்தியாவில் கிடைக்கிறது. இது நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது.
செமாக்ளூடைடு ஊசி எப்படி செயல்படுகிறது?
செமாக்ளூடைடு, குடலில் உள்ள GLP-1 என்ற இயற்கையான ஹார்மோனின் செயல்பாட்டைப் பிரதிபலிப்பதன் மூலம் செயல்படுகிறது. இந்த ஹார்மோன் மூளைக்கு நீங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம், குறைவாக சாப்பிடவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது.
இந்த மருந்தை பயன்படுத்தியவர்கள், ஒரு வருடத்திற்கும் மேலாக (68 வாரங்கள்) தங்கள் உடல் எடையில் சுமார் 15% குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் வெகோவியின் அறிமுகம்:
செமாக்ளூடைடுக்கான காப்புரிமை அடுத்த ஆண்டு காலாவதியாக உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியாவில் வெகோவி அறிமுகமாகியுள்ளது. காப்புரிமை காலாவதியான பிறகு, பல இந்திய மருந்து நிறுவனங்கள் மலிவான விலையில் செமாக்ளூடைடு மருந்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த மருந்து மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும்.
உடல் பருமன் தற்போது நீரிழிவு, இதய நோய், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் உட்பட பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வெகோவிக்கு போட்டியாக மௌன்ஜாரோ:
முதலில், வெகோவியை 2026இல் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இப்போது 2025ஆம் ஆண்டிலேயே அதனை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது. கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வகையில், நோவோ நோர்டிஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எலி லில்லி (Eli Lilly) நிறுவனத்தின் 'மௌன்ஜாரோ' (Mounjaro - Tirzepatide) மருந்து மார்ச் 2025 இல் சந்தையில் நுழைந்ததே இதற்குக் காரணம்.
வெகோவி (Wegovy) மற்றும் அதன் போட்டியாளரான மௌன்ஜாரோ (Mounjaro) ஆகிய இரண்டு மருந்துகளும் 30-க்கு அதிகமான உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index - BMI) கொண்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.