டீப் ஃபேக் தொழில்நுட்பம் மிகப்பெரிய கவலை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, இது மிகப்பெரிய கவலை என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உஷாராக இருக்கவும், இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவும்போது எச்சரிக்கை செய்யவும் ChatGpt குழுவைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
டீப்ஃ பேக்கின் ஆபத்துகள் குறித்துப் பேசிய பிரதமர், தான் கர்பா நடனமாடுவது போன்ற வீடியோவைப் பார்த்ததாகவும், ஆனால் பள்ளியிலிருந்தே தான் கர்பா நடனமாடியதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
உடை மாற்றும் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி!
முன்னதாக, சமூக வலைதளங்களில் சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று வெளியானது. அதன் தொடர்ச்சியாக, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, ஏற்கனவே அமலில் இருக்கும் சட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.
மேலும், போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தைப் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
“டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிப்பவை. குறிப்பாக, அவை பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் எங்களது அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம், குறிவைக்கப்படும் எங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.” என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
மத்திய அரசும், அமைச்சரும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திந்தபோதும், டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை கஜோல் உடைமாற்றுவது போன்ற போலி வீடியோ உருவாக்கப்பட்டு அது சமூக வலைதளங்களில் நேற்று வைரலான நிலையில், டீப் ஃபேக் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.