
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்தடுத்து வலுப்பெற்று அதிதீவிரப் புயலாக மாறியது. பிபர்ஜாய் என பெயரிடப்பட்ட இந்த புயல், மிக தீவிர புயலாக வலுவிழந்து குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
பிபர்ஜாய் புயல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு இருவர் உயிரிழந்ததாகவும், கரையைக் கடந்த பிறகு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் 5,120 மின்கம்பங்கள் சேதமாகியுள்ளன. 4,600 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3,580 கிராமங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 600க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்தாலும் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றும் வேகமாக வீசி வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிபர்ஜாய் புயல் ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இவ்விரு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 200 மி.மீ வரை மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அச்சு அசலாக மோடியே யோகா செய்வது போன்ற வேற லெவல் அனிமேஷன்... பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய தகவலின்படி, மிகத் தீவிர புயலான பிபர்ஜாய், சூறாவளி புயலாக வலுவிழந்துள்ளது. இன்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபர்ஜாய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் தோலாவிரா அருகே நிலை கொண்டுள்ளது. புயலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும் புயலாக அது மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
பிபர்ஜாய் புயல் ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி நகர்வதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் வலுவிழந்து ஜோத்பூர், ஜெய்சால்மர், பாலி மற்றும் சிரோஹி நோக்கி நகரும். இதனால், அங்கு மிக கன மழை பெய்யக்கூடும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ராஜ்சமந்த், துங்கர்பூர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்சால்மர், பார்மர், ஜலோர் மற்றும் ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்றும், ஜோத்பூர், உதய்பூர், அஜ்மீர் ஆகிய பகுதிகளில் நாளையும் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.