
தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டா ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த ஒரு வாரகமாக போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் விடிய விடிய அலங்கநல்லூரில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 250க்கு மேற்பட்டோர் மீது தடியடி நடத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து நேற்று காலை முதல் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும், சினிமா நட்சத்திரங்களும் குரல் கொடுத்துள்ளனர்.
இதைதொடர்ந்து தமிழக மக்களின் உணர்ச்சிக்களை புரிந்து, அவர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கிரிக்கெட் வீரர் முகமது கயிஃப் நேற்று தனது டுவிட்டர் பக்கம் மூலம் ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக், தமிழக மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, தன்னுடைய ஆதரைவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழத்தில் அமைதியான முறையில் கல்லூரி மாணவர்கள் அறப்போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது, மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்வத்துடன் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் அமைதி தொடரவேண்டும். அமைதியான போராட்டம் எல்லோருக்கும் நல்லதொரு பாடமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.