
பந்த் வெற்றியடைந்ததை உணர்த்தும் விதமாக சாலையில் கிரிக்கெட் விளையாடிய கன்னட அமைப்பை சேர்ந்த ஒருவரின் மண்டை உடைந்தது.
மகதாயி ஆற்றிலிருந்து கர்நாடகாவிற்கு கோவா அரசு நீர் திறந்துவிட வலியுறுத்தியும் பிரதமர் மோடி தலையிட்டு நீர் திறந்துவிட வலியுறுத்தியும் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் முடங்கியுள்ளது.
இந்நிலையில்தாவணகெரே நகரில் உள்ள ஜெயதேவா சர்க்கிள் பகுதியில், கிரிக்கெட் ஆடி நூதன போராட்டம் நடத்தினர் கன்னட அமைப்பினர். சாலை காலியாக உள்ளதால், கிரிக்கெட் ஆடுகிறோம். அந்த அளவுக்கு பந்த் வெற்றி பெற்றுள்ளது என்று காண்பித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க நினைத்தனர். ஆனால், அவர்கள் இப்படியொரு நிகழ்வு நிகழும் என அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கிரிக்கெட் ஆட்டத்தின்போது, தாணவகெரே மாவட்ட கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான, சிவகுமார் பேட் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக பேட் கையிலிருந்து பறந்து லோஹித் என்பவரின் மண்டையில் பட்டு மண்டை உடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பந்த் வெற்றியை கொண்டாட நினைத்து மண்டை உடைந்தது தான் மிச்சம்.