நியூஸ் க்ளிக் விவகாரம்: சீதாராம் யெச்சூரி இல்லத்தில் ரெய்டு!

By Manikanda Prabu  |  First Published Oct 3, 2023, 12:52 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்தில் டெல்லி சிறப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்


சீன நிதியுதவி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் தூதரக அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற பல்துறையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 255 பேர் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதினர். அதில், நியூஸ் கிளிக் இணையதளம் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்கள், அதன் பத்திரிகையாளர்கள், ஊழியர்களின் இல்லங்களில்  டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை மரணங்கள்: காங்கிரஸ் கடும் கண்டனம்!

பணமோசடி மற்றும் சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக நியூஸ் க்ளிக் செய்தி ஊடகம் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தங்கியிருந்த நியூஸ் கிளிக் ஊழியர்களின் உடமைகளைத் தேடுவதற்காக டெல்லி காவல்துறையினர் அவரது இல்லத்தில் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது ஊடகங்களை முடக்கும் முயற்சி என சாடியுள்ள சீதாராம் யெச்சூரி, பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா ஏன் சறுக்குகிறது என்பதற்கு இதுவே சான்று என கடுமையாக சாடியுள்ளார்.

இந்த சோதனை குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “நான் நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. யாரேனும் ஏதேனும் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் ஏஜென்சிகள் சுதந்திரமாக விசாரணை நடத்த முடியும்.” என தெரிவித்துள்ளார்.

டெல்லி, நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது டெல்லி காவல்துறை ஏற்கெனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

click me!