நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது
டெல்லியைச் சேர்ந்த நியூஸ் க்ளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூஸ் க்ளிக் தொடர்புடைய இடங்கள், அதன் பத்திரிகையாளர்கள், ஊழியர்களின் இல்லங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பணி புரியும் எட்டு பத்திரிகையாளர்கள் உட்பட பலரது வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், “நியூஸ் க்ளிக் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட பல சோதனைகள் குறித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதுதொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். விரிவான அறிக்கை வெளியிடப்படும்.” என்று பதிவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல்: தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!
மேலும், பத்திரிகையாளர்களுடன் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா துணை நிற்பதாகவும், அரசாங்கம் இதுகுறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.