கோரதாண்டவம் ஆடும் கொரோனா... இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 19, 2021, 6:01 PM IST
Highlights

 தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும், சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அக்டோபர் மாதம் முதல் கட்டுக்குள் வர ஆரம்பித்ததாலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காகவும் பள்ளிகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவெடுத்தது. அதன் படி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

அதன் பிறகு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேரமாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னர் வகுப்புகள் முழு நேரமாக வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வந்தன. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றைய நிலவரப்படி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்காட்டான சூழ்நிலையில் நேற்று, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி குறித்த உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சுகாதாரத்துறை இயக்குநர் பள்ளிகளை தற்காலிகமாக மூட பரிந்துரை செய்திருந்தது. 

இந்நிலையில், இன்று  புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 2 பேராசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மாணவிகள் கல்லூரிக்கு வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்ற தகவல் தீயாய் பரவி வந்தது. தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும், சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!