நேர்மைக்கு கிடைத்த பரிசு! ரயில்வே கூலித் தொழிலாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

By SG BalanFirst Published Mar 22, 2023, 3:17 PM IST
Highlights

தாதர் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே கூலித் தொழிலாளர் நேர்மையாக நடந்துகொண்டற்காக அவருக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மும்பையில் தாதர் நிலையத்தில் 30 ஆண்டுகளாக சுமை தூக்கும் கூலித் தொழிலாளராக வேலை செய்பவர் தர்ஷ்நாத் டாண்ட். 62 வயதாகும் இவர் திங்கட்கிழமை, ஸ்டேஷனின் இருக்கை பகுதியில் தற்செயலாக மொபைல் போன் கிடப்பதைக் கவனித்திருக்கிறார். விலை உயர்ந்த அந்த மொபைல் போனை அவர் தானே வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல், உடனடியாக ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் அவரது நேர்மையைப் பாராட்டியதுடன், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையின்போது அந்த மொபைல் போன் 1.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்றும் நடிகர் அமிதாப் பச்சனின் மேக்கப் கலைஞரான தீபக் சாவந்துக்குச் சொந்தமான மொபைல் அது என்றும் தெரியவந்தது. சாவந்த் குடும்பத்தினர் தர்ஷ்நாத்தின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ரூ.1,000 ரொக்கப் பரிசாக வழங்கியுள்ளனர்.

மார்ச் 20ஆம் தேதி தர்ஷ்நாத் ரயில்களில் பயணிகளின் பொருட்களை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 11.40 மணியளவில், நடைமேடை எண் 4 இல் இருந்த அவர் மொபைல் போனைக் கண்டெடுத்துள்ளார். அதுபற்றிக் கூறும்போது, “நான் பிளாட்பாரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த இருக்கையில் ஒரு போன் கிடப்பதைக் கண்டேன். அதை எடுத்து அருகில் அமர்ந்திருந்த பயணிகளிடம் இது தங்களுடையதா என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் தங்களுடையது இல்லை என்று சொன்னார்கள் ” என தர்ஷ்நாத் கூறுகிறார்.

பின்னர் நேராக தாதர் ரயில்வே போலீசார் சவுக்கிக்கு சென்று மொபைல் போன் கிடைத்ததைப் பற்றிக் கூறியுள்ளார். "எனக்கு மொபைல் போன்களைப் பற்றி நிறைய தெரியாது. நான் வேறு யாருடைய பொருளையும் வைத்துக்கொள்ள விரும்பமாட்டேன்" என்கிறார் தர்ஷ்நாத்.

மொபைல் போனை ஒப்படைத்துச் சென்ற சிறிது நேரத்தில், போலீசார் அவரை அழைத்துள்ளனர். அந்த மொபைல் போனின் உரிமையாளரைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினர். நேரில் சென்றதும் போலீசார் முன்னிலையில் தர்ஷ்நாத் தானே மொபைல் போனை உரிமையாளரான தீபக் சாவந்த் வசம் ஒப்படைத்தார். அவருக்கு ரயில்வே போலீசாரும் சாவந்த்தும் பாராட்டு தெரிவித்தனர்.

click me!