
12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை ரத்து செய்யப்பட்டு, மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்விற்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் குரல் எழுப்புகின்றன.
நீட் தேர்விற்கு ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் தமிழக மாணவர்களை நீட் தேர்விற்கு தயார் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 39.9% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வாகியுள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக இருந்த பீகார் மாநில மாணவி தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகை பதிவு அந்த மாணவிக்கு இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பீகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, நீட் தேர்விற்காக டெல்லியில் தங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக தயார் செய்துவந்துள்ளார். டெல்லியில் தங்கி படித்ததால், பீகாரில் உள்ள அவர் படித்த பள்ளியில் வகுப்பிற்கு சரியாக செல்லவில்லை. அதனால் பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப்பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் பொதுத்தேர்வு எழுது அந்த மாணவி 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வருகைப்பதிவு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக பேசிய அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கிருஷ்ணாந்த், நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மாணவி கல்பனா குமாரி பீகாருக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதை அனைவரும் பாராட்ட வேண்டும். அதை விடுத்து அவரது வருகைப்பதிவு குறித்து சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதிமுறைகளை பின்பற்றியே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.