பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் வலியுறுத்தல்!

By Manikanda Prabu  |  First Published Sep 17, 2023, 4:18 PM IST

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதன்படி, நாளை தொடங்கும் ஐந்து நாள் சிறப்பு அமர்வு தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் எனவும், செப்டம்பர் 19 அன்று விநாயக சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கோருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest Videos

undefined

முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களைப் பாராட்டிய ஜெய்ராம் ரமேஷ், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதன்முதலில் பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை 1989ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தினார். இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ராஜ்யசபாவில் தோல்வியடைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் 1993ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்தினார். இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகின. இப்போது பஞ்சாயத்துகள் மற்றும் நகரபாலிகாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

 

The Congress Working Committee has demanded that the Women’s Reservation Bill must be passed during the Special Session of Parliament. Here are some facts on the issue:

1. Rajiv Gandhi first introduced Constitution Amendment Bills for one-third reservation in panchayats and…

— Jairam Ramesh (@Jairam_Ramesh)

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டுக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதா 2010ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதியன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

“ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்ட / நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் காலாவதியாகாது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இன்னும் நிலுவையில்தான் உள்ளது. ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, மக்களவையிலும் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது.” எனவும் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் மசோதா உட்பட நான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

அணை பாதுகாப்பு: கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க மத்திய அமைச்சர் பரிந்துரை!

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2023’ மற்றும் ‘பத்திரிகைகள் மற்றும் பதிவுசெய்தல் மசோதா, 2023’ ஆகியவையும் எடுத்துக் கொள்ளப்படும். 'தபால் அலுவலக மசோதா, 2023' மக்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய தபால் அலுவலக சட்டம், 1898 ஐ ரத்து செய்யும் இந்த மசோதா முன்னதாக ராஜ்யசபாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி  அறிமுகப்படுத்தப்பட்டது.

click me!