
நாட்டில் ஒரு நாள் இரவில் மக்களின் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காங்கிரஸ் பறித்து
இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாட்டில் 1975ஆம் ஆண்டில் உள்நாட்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் எமர்ஜென்சி
கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். ஜனாதிபதியாக
ஃபக்ருதின் அலி அகமது இருந்தார். இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் எமர்ஜென்சி
கொண்டு வரப்பட்டது.
இன்றைய நாளில்தான் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. இதை முன்னிட்டு தனது டிவிட்டர்
பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''இன்றைய நாளில்தான்
ஒரே நாள் இரவில் மக்களின் உரிமைகளைப் பறித்து எமர்ஜென்சியை கொண்டு வந்து இருந்தது. அந்த
நேரத்தில் நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க, சர்வாதிகாரத்தை தோற்கடிக்க
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைத்து தியாகிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்'' என்று தெரிவித்து
இருந்தார்.
இதேபோல் கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''நாட்டின்
வரலாற்றில் கருப்பு நாள் என்றழைக்கப்படும் இன்றைய நாளை யாரும் மறந்துவிட முடியாது. நாட்டின்
கண்ணியத்தை பராமரிக்க, பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.