முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!

Published : Jun 19, 2023, 02:32 PM IST
முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்: ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி!

சுருக்கம்

பொதுத்துறை நிறுவனங்களில் வேலையிழப்பு தொடர்பாக முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது

பாஜக ஆட்சியமைத்த முதலே பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவது பற்றியும், வேலையிழப்புகள் பற்றியும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இதுகுறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அந்த வகையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, ஒவ்வொரு இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமையாக இல்லை. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 2022ஆம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்துள்ளது. வளர்ந்து வரும் நாட்டில் வேலை வாய்ப்புகள் ஏன் குறைகிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1,81,127 பேர், SAIL இல் 61,928 பேர், MTNL இல் 34,997 பேர், SECL இல் 29,140 பேர், FCI இல் 28,063 பேர், ஓஎன்ஜிசியில் 21,120 பேர் வேலை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, “ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள், வேலைகளை அதிகரிப்பதற்குப் பதிலாக, 2 லட்சத்துக்கும் அதிகமானோரின் வேலையை ஒழித்துள்ளார்கள். அதோடு அல்லாமல், இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்சேர்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களை அதிகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வரும் இடஒதுக்கீடு என்ற உரிமையைப் பறிக்கும் வழியல்லவா?  இந்த செயல்கள் இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்கும் சதியா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசு வேலைகள் நீக்குதல், இது என்ன வகையான ஒழிப்பு என கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, “இது  உண்மையிலேயே 'அமிர்த காலம்' என்றால் ஏன் இப்படி வேலைகள் குறைந்து வருகின்றன? ஒரு சில முதலாளித்துவ நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதால், இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது.” எனவும் சாடியுள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: முழு விவரம்!

“இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்தால், அவற்றால், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் நாடு மற்றும் நாட்டு மக்களின் சொத்து, அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.” எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் அமித் மால்வியா, “எச்.ஏ.எல்., எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதிக லாபம் ஈட்டியபோதும், முட்டாள்தனமான, மோசமான பிரசாரத்தை முன்னெடுக்கிறீர்கள். உங்கள் வஞ்சகத்துக்கு ஏற்றவாறு நீங்கள் மீண்டும் தரவை சிதைக்கிறீர்கள்.

2013ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20.3 லட்சமாக இருந்தது. நிலமையை சிந்தித்து நன்கு ஆராய்ந்து BSNL/MTNL மற்றும் ஏர் இந்தியாவில் முதலீடுகளை விலக்கினாலும்கூட, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை அப்படியே 19.8 லட்சமாக இருந்தது. கூடுதலாக, ஆட்சேர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பொதுத்துறை நிறுவனங்களில் 20,000 புதிய வேலைகள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த 2013 ஆம் ஆண்டை விட 2022 இல் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல பொதுத்துறை நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (79,828), மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் (36,418), நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் (22,235), நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் (17,674) மற்றும் ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பு நிறுவனத்தில் 16,422 என புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் வேறு  சில நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

 

 

இது மட்டுமின்றி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் 2013-14 நிதியாண்டில் ரூ.1.29 லட்சம் கோடியாக இருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.2.49 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன, இது 93 சதவீதம் அதிகமாகும்.

கலால் வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி, மத்திய அரசின் கடன்களுக்கான வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிற வரிகள் மூலம் மத்திய கருவூலத்திற்கு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 2013-14 நிதியாண்டில் ரூ.2.20 லட்ம் கோடியில் இருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.5.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அனைத்து பொதுத்துறைகளின் நிகர மதிப்பு 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ரூ.9.5 லட்சம் கோடியாக இருந்தது. அது 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ரூ.15.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

எனவே, பொதுத்துறை நிறுவனங்களின் நிலை குறித்து காங்கிரஸ் ‘முதலைக் கண்ணீர்’ வடிப்பதை நிறுத்த வேண்டும். காங்கிரஸின் மோசமான கொள்கைகளால், எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்தன. அதனால், சுகாதாரம் மற்றும் கல்விக்காகப் பயன்படுத்தப்படக்கூடிய வரி செலுத்துவோர் பணத்தை வீணடிக்கப்பட்டது. கடுமையான ஊழல் மற்றும் முட்டாள்தனமான கொள்கைகள் காரணமாக ஏர் இந்தியா மற்றும் BSNL ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அழிக்கப்பட்டன.

ஆனால், பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில், மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை சீர்திருத்தியுள்ளது. காங்கிரஸின் ஆட்சியில் இருந்ததை விட அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.” என அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!