பிரதமர் மோடி அமெரிக்க பயணம்: முழு விவரம்!

By Manikanda Prabu  |  First Published Jun 19, 2023, 12:20 PM IST

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திட்டம் தொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோர் அழைப்பையேற்று பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்வதுடன், அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறவுள்ளதால், அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும்  வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதற்கிடையே, அவரை வரவேற்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திட்டம் தொடர்பான முழு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 24ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடியின் பயணம் நியூயார்கில் தொடங்கவுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் செல்லும் பிரதமர் மோடி, ஜூன் 20ஆம் தேதி (நாளை) நியூயார்க் சென்றடைவார். ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

இதையடுத்து, 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். அதன்பின்னர், வாஷிங்டன் செல்லும் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அரசு  சார்பில் மரியாதை அளிக்கப்படவுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, அவருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் இரவு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் அரசு சார்பில் இரவு விருந்து அளிக்கவுள்ளனர்.

சீன - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏழரை மணிநேரம் சந்திப்பு!

இதையடுத்து, ஜூன் 22ஆம் தேதியன்று அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களின் அழைப்பின் பேரில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மற்றும் செனட் அவையின் சபாநாயகர் சார்லஸ் ஷுமர் உட்பட, அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதன் மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறவுள்ளார். இஸ்ரேல் நாட்டுக்கு பிறகு, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் மூன்றாவது உலகத் தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெறவுள்ளார். இதற்கு முன்பு, 2016 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிகாலத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். முன்னதாக, அன்றைய தினம் காலையில், ஜோ பைடனுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெளியாகி இருக்கும் பதாகை
1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2வது முறை பிரதமர் மோடி பேசுகிறார்
2. பிரதமருக்கு அமெரிக்கா அரசு முறை மரியாதை அளிக்கிறது.
3. உலகத் தலைவரான மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.… pic.twitter.com/00HBqvqkwi

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

தொடர்ந்து, ஜூன் 23ஆம் தேதியன்று, பிரதமர் மோடிக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இணைந்து மதிய விருந்து வழங்க உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்பிறகு, அமெரிக்க வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கவுள்ளார். ரொனால்ட் ரீகன் மையத்தில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே அன்றைய தினம் மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி அரசு முறை பயணமாக எகிப்து நாட்டுக்கு செல்லவுள்ளார். அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியை சந்தித்து இரு தரப்புக்கும் இடையே வர்த்தகம் மற்றும் மூலோபாய உறவுகளை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!