"நாடு முதன்மையானது, கட்சி இரண்டாம்பட்சம்..." என்று கூறியுள்ள சந்தீப் பதக், இரு கட்சிகளும் இணைந்து டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி (AAP) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா, கோவா மற்றும் குஜராத்தில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நிறைவேறி இருப்பதாக இரு கட்சிகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவ்விரு கட்சிகளும் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடப் போவதில்லை எனவும் பரஸ்பரம் முடிவு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்றும், சாந்தனி சௌக், வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் வாஸ்னிக் கூறியுள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி! திருப்பூரில் திரளும் 10 லட்சம் பேர்... மிகப்பெரிய பொதுக்கூட்டம் இதுதான்!
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். ஆம் ஆத்மி கட்சி பருச் மற்றும் பாவ்நகர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும். ஹரியானாவில் உள்ள 10 இடங்களில் காங்கிரஸ் 9 இடங்களில் போட்டியிடும். குருஷேத்ரா தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மி வேட்பாளர் போட்டியிடுவார்.
நீண்ட இழுப்பறிக்கு பின்னர் யூனியன் பிரதேசமான சண்டிகர் மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவதாக முடிவாகி இருக்கிறது. கோவாவில் இருக்கும் மக்களவை தொகுதிகள் இரண்டிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
இந்தத் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசியுள்ள ஆம் ஆத்மி தலைவர் சந்தீப் பதக், “வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை, பணவீக்கம் போன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இன்று நாட்டிற்கு வலுவான அரசாங்கம் தேவை" எனக் கூறியுள்ளார்.
"நாடு முதன்மையானது, கட்சி இரண்டாம்பட்சம்..." என்று கூறியுள்ள அவர், இரு கட்சிகளும் இணைந்து டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம் எனவும் பஞ்சாபில் தனித்தனியாக போட்டியிடுவதாகவும் முடிவு செய்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னது... ஜிமெயில் குளோஸ் பண்ண போறாங்களா? இல்லவே இல்ல... கூகுள் சொல்றது இதுதான்!