பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

By Manikanda Prabu  |  First Published Mar 15, 2024, 4:28 PM IST

பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த 12ஆம் தேதி சமர்ப்பித்தது. தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை.

Latest Videos

undefined

தேர்தல் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமான நிதியை பாஜக பெற்றுள்ளது. மொத்த தேர்தல் பத்திரங்களில் 47.46 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது. அதேபோல், அரசியல் கட்சிகளுக்கு ஏராளமான நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. குறிப்பாக, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ரெய்டுகளில் சிக்கிய நிறுவனங்கள், தனி நபர்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவிற்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்தது என கேள்வி எழுப்பியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, இவர்கள் தொழிலதிபர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் மிரட்டி இந்த பணத்தை வாங்கினார்களா? அல்லது லஞ்சமாக பெறப்பட்டதா? போன்றவை குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். அதுவரை பாஜகவின் வங்கி கணக்கு முடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

click me!