ரயில் விபத்தில் பிரதமருக்கு பல கேள்விகள்: காத்திருக்கும் மல்லிகார்ஜுன கார்கே!

Published : Jun 03, 2023, 05:03 PM IST
ரயில் விபத்தில் பிரதமருக்கு பல கேள்விகள்: காத்திருக்கும் மல்லிகார்ஜுன கார்கே!

சுருக்கம்

டெல்லி: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடியிடம் கேட்க பல கேள்விகள் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தில் ஒன்றாக பார்க்கப்படும் மூன்று ரயில்கள் விபத்து ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சிக்கி, இதுவரை சுமார் 261 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒடிசா மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் சென்றுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடம் நேரில் சென்று அவர் ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ரயில்வேயில் விபத்து தடுப்பு கருவிகள், பாதுகாப்பு அமைப்புகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இந்திய ரயில்வேயின் ‘கவாச்’ என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம், இது அரசியல் செய்யும் நேரமல்ல எனவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் துணை நின்று அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் ஒருசாரார் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடியிடம் கேட்க பல கேள்விகள் உள்ளதாகவும், மீட்பு பணிகளே தற்போது முக்கியம் எனவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தருணத்தில் அனைத்து காங்கிரஸ் கட்சி அமைப்புகளும் சாத்தியமான மற்றும் தேவையான உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளே தற்போது முக்கியம். அவற்றுக்கு முன்னுரிமை அளித்து அந்த கேள்விகள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனிடையே, இன்றைய தினம் எந்த தொலைக்காட்சி ஊடக விவாதங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அரசை குறை கூறுவதை நிறுத்திவிட்டு மற்றவற்றில் கவனம் செலுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!