பாகிஸ்தானை மதிக்கவில்லை எனில், அவர்கள் இந்தியா மீது அணு ஆயுதங்களை வீசுவார்கள் என்று காங்கிரஸின் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், அணு ஆயுதத்தை பயன்படுத்தக்கூடும் என்பதால் அந்நாட்டின் ராணுவ வலிமையை எளிதா நினைக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய அவர் “ இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை இயல்பாக்குவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். ஆனால் இந்தியா அண்டை நாட்டை மதிக்கவில்லை என்றால், அது பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன, ஆனால் லாகூரில் ஒரு அணுகுண்டு வீச முடிவு செய்தால், அந்த கதிர்வீச்சு அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் எடுக்காது," என்று அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய "நாம் அவர்களை மதித்தால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் நாம் அவர்களைப் புறக்கணித்தால், அணு குண்டுகளை இந்தியாவில் வீச முடிவு செய்தால் என்ன ஆகும்?" என்று கேட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்த ஐயர், "விஷ்வகுருவாக மாறுவதற்கு, பாகிஸ்தானுடனான நமது பிரச்சினைகள் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், அவற்றைத் தீர்க்க கடினமாக உழைக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில். இதற்கு கடின உழைப்பு எதுவும் இல்லை." என்று தெரிவித்தார்.
எல்லையில் இருந்து தப்பிச் சென்றவர்களைக் கொல்ல இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழையும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்திருந்த நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்த சூழலில் மணி சங்கர் அய்யர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். .
பிரதமரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, மற்ற மூத்த பாஜக தலைவர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்களைத் தொடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) "எங்களுடையது, அது தொடர்ந்து நம்மிடம் தான் இருக்கும் " என்று வலியுறுத்தினார், ஆனால் இந்தியா அதை பலத்தால் கைப்பற்ற வேண்டியதில்லை, ஏனெனில் அதன் மக்கள் தாங்களாகவே அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள்.” என்று கூறினார்..
தேசிய மாநாட்டு (NC) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, பாகிஸ்தானின் அணுசக்தி திறன்களை ராஜ்நாத் சிங்குக்கு நினைவுபடுத்தினார். "நினைவில் கொள்ளுங்கள், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன, துரதிர்ஷ்டவசமாக, அந்த அணுகுண்டு நம் மீது விழும்" என்று அவர் எச்சரித்தார்.