
ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின், ரூ. 500, ரூ.2000 நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டுள்ளது, நாட்டின் பணத்தின் நம்பகத்தன்மைக்கே வேட்டு வைத்துவிட்டார்கள், இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெவ்வேறு அளவுகளில் ரூ.500, ரூ.2000 நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது குறித்து மாநிலங்கள் அவையில் எழுப்பி எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின் நாடாளுமன்றத்துக்கு வௌியே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான கபில் சிபல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
ரூபாய் நோட்டு தடைக்கு பின் ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும். அதுவரை இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு தடை, கருப்பு பணம், ஊழல், கள்ளநோட்டுகள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்கும் என்றார்கள். ஆனால், அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது.
ஆதலால், ஏன் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்கள் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். முதலில் எந்த விதமான மையினால், ரூபாய் நோட்டு அச்சடிக்க பயன்படுத்தினார்கள், என்ன வகையான ரூபாய் நோட்டுகள் அச்சடித்தார்கள், எந்த அச்சகத்தில் அச்சடித்தார்கள் என்பதை முதலில் கூற வேண்டும். வெவ்வேறு அளவுகளில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, நாட்டின் பணத்தின் நம்பகத் தன்மைக்கு வேட்டு வைத்து விட்டார்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ஆகியோர் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.