
பிரதமர் மோடியின் அலுவலகம் கடந்த 2016ம் ஆண்டில் பொதுமக்களிடம் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது.
மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், “ பிரதமர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முறை மற்றும் கண்காணிப்பு கடந்த 2015 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இதில் பல்வேறு அரசு துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக மக்கள் புகார்கள் அளிக்கலாம். கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் அலுவலகத்துக்கு ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 29 ஆயிரத்து 523 புகார்கள் வந்துள்ளன. இதில் 7 லட்சத்து 52 ஆயிரத்து 635 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2015ம் ஆண்டில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 112 புகார்கள் வந்தன. அதில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 247 புகார்கள் தீர்க்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே 92 ஆயிரத்து 652 புகார்கள் வந்துள்ளன. அதில் 49 ஆயிரத்து 196 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. அனைத்து துறைகளும், தங்களுக்கென குறைதீர் மையங்கள் அமைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால். இந்த புகார்கள் அங்கு மாற்றப்பட்டு தீர்வு காணப்பட்டு அறிக்கை அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.