மத்திய அரசின் கீழ் உள்ள விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளுக்கு பின்னர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள விவரம் வெளியாகியுள்ளது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த 12ஆம் தேதி சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன.
ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை. இருப்பினும், அதனை தெரிந்து கொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமான நிதியை பாஜக பெற்றுள்ளது. மொத்த தேர்தல் பத்திரங்களில் 47.46 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது. அதேபோல், அரசியல் கட்சிகளுக்கு ஏராளமான நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன. குறிப்பாக, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளில் சிக்கிய நிறுவனங்கள், தனி நபர்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, கட்சிகளுக்கு நிதி அளித்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அந்நிறுவனம் ரூ.1,368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.409 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதியன்று அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.
பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!
** பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய நாள் 02/04/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 07/04/2022
** அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி அந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.
** ஷிர்டி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 20/12/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 11/01/2024
** டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 13/11/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 17/11/2023
** கலபட்டரு ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 04/08/2023; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/10/2023
** மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 14/07/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/10/2022
** ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 31/03/2022; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 07/10/2022
** யஷோ மருத்துவமனைகள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாள் 26/12/2020; அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 2021 ஏப்ரல் முதல் 2023 அக்டோபர் மாதம் வரை
** டொரண்ட் பவர் எனும் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/01/2024; தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு PM Kusum திட்டத்தின் கீழ் சோலார் தகடுகள் அமைப்பதற்கான ரூ.1540 கோடி மதிப்பிலான டெண்டர் மகாராஷ்டிர அரசிடம் இருந்து கிடைத்தது.
** ஆப்கோ எனும் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நாள் 10/01/2022; வெர்சோவா - பாந்த்ரா கடல் பாலம் அமைப்பதற்கான ரூ.9000 மதிப்பிலான டெண்டர் மகாராஷ்டிர அரசு மூலம் அந்நிறுவனத்துக்கு கிடைக்கிறது.