
இந்தியாவில் அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமானதால், கோக கோலாவின் விற்பனை வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. அதனால் சுமார் 250 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க கோக கோலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாட்டு மாடுகளை அழிக்க பன்னாட்டு நிறுவனங்களின் சதிதான் ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தடை கோருகிறது என்ற குரல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எழத் தொடங்கியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டம், ஜல்லிக்கட்டிற்கான போராட்டமாக மட்டுமில்லாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் திரும்பியது.
அப்போது இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பினால், தமிழ்நாட்டில் கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்கள் விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வும், இயற்கையைப் பேணுவது தொடர்பான விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
எனவே மக்கள், படிப்படியாக அந்நிய குளிர்பானங்களிலிருந்து ஆரோக்கிய பானங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.
அதனால், கோக கோலா, பெப்சி போன்ற நிறுவனங்களின் குளிர்பான விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
அதனால், கடந்த 2 ஆண்டுகளில் அசாமில் ஜோர்கோட், மேகாலயாவில் பைர்னிஹார், ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், கர்நாடகாவில் ஹொஸ்பேட் உள்ளிட்ட பல இடங்களில் கோக கோலா நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே கார்ப்பரேட் அலுவலகங்களின் கிளைகளை குறைத்துக்கொண்டு விற்பனையை அதிகரிக்க கோக கோலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிதாக குளிர்பான உற்பத்தி மையங்களை திறக்க விவசாயிகளும் உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள கோக கோலா நிறுவனம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், சப்ளை செய்வதற்கான குறைந்த ஊதியத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு, நிதி மற்றும் மனிதவள பிரிவில் வேலை செய்யும் சீனியர் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.