
கர்நாடகா மாநிலம் ஷாஹாப்பூரில் உள்ள அரசு விடுதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிவறையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை மதியம் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், இது வியாழக்கிழமையன்று வெளிச்சத்துக்கு வந்தது. இதைக் கண்டித்த கர்நாடகா மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சசிதர் கோசம்பே, இதுகுறித்து புகார் அளித்துவிட்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை:
மாணவியும் அவரது குழந்தையும் தற்போது ஷாஹாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆணையத்திற்குத் தெரிவிக்கவில்லை என்று கோசம்பே கூறினார். "சம்பவம் குறித்து எங்களுக்கு வேறு வழிகளில் இருந்துதான் தெரியவந்தது. பள்ளி முதல்வர் மற்றும் ஊழியர்கள் மீது தாமாக முன்வந்து புகார் பதிவு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் இதுகுறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
பள்ளி முதல்வரின் விளக்கம்:
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் பசம்மா கூறும்போது, "மாணவியின் கர்ப்பம் குறித்து எந்த அறிகுறிகளும் எனக்குத் தெரியவில்லை. நான் கடந்த மாதம் தான் முதல்வராகப் பொறுப்பேற்றேன். அந்த மாணவியின் பிறப்புச் சான்றிதழில் அவரது வயது 17 ஆண்டுகள் 8 மாதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன், மாணவி பல நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் வகுப்புகளுக்கு வரத் தொடங்கினார். ஆனால், தலைவலி மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி பல நாட்கள் விடுமுறை எடுத்தார். அவர் குழந்தையைப் பெற்றெடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது பெற்றோரை நாங்கள் பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் பேச முன்வரவில்லை" என்று தெரிவித்தார்.
மாணவி மற்றும் குழந்தையின் நிலை:
தற்போது மாணவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும், இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.