
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம், 2021-ஐ எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஏற்க மறுத்துள்ளார். நேரில் ஆஜராகாத மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி மீது தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சமீப நாட்களில் தலைமை நீதிபதி, அரசு தலைமை வழக்கறிஞரின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவிப்பது இது இரண்டாவது முறையாகும்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஒத்திவைப்புக் கோரிக்கையை முன்வைத்தார். அப்போது தலைமை நீதிபதி கவாய், ஐஸ்வர்யா பாட்டியை நோக்கி, "நீதிமன்றத்தில் இப்படிக் கோருவது நியாயமல்ல" என்று நேரடியாகக் குறிப்பிட்டார்.
அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஒரு சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் (International Arbitration) பங்கேற்றுள்ளதால், இந்த முக்கிய வழக்கில் ஆஜராக அவகாசம் கோரியதாக ஐஸ்வர்யா பாட்டி தெரிவித்தார்.
ஆனால், தலைமை நீதிபதி கவாய், இந்த வழக்கின் ஆவணங்களைப் படிப்பதற்கு நீதிபதிகள் நேரத்தைச் செலவிட்டுள்ளதைக் குறிப்பிட்டு, தான் ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என மறைமுகமாகக் கேள்வி எழுப்பினார்.
"நாங்கள் அவருக்கு (அட்டர்னி ஜெனரலுக்கு) ஏற்கெனவே இரண்டு முறை அவகாசம் அளித்துள்ளோம். நவம்பர் 24-க்குப் பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லுங்கள்" என்று சற்றே கோபத்துடன் வினவினார்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நவம்பர் 24 அன்று ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பும், இந்த வழக்கைத் தமது அமர்வில் இருந்து மாற்றி, பெரிய அமர்வுக்கு அனுப்பும்படி அட்டர்னி ஜெனரல் கொடுத்த கோரிக்கையும் ஒரு தந்திரம் தானா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது வெங்கடரமணி, அது தந்திரம் அல்ல என்று பணிவுடன் விளக்கம் அளித்தார்
இன்றைய ஒத்திவைப்புக் கோரிக்கையின்போது, தலைமை நீதிபதி கவாய் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் சிரமத்தையும் சுட்டிக்காட்டினார்.
"இந்த வழக்கை முடிப்பதற்காக நீதிமன்றம் நாளை (நவம்பர் 7) வேறு எந்த வழக்கையும் பட்டியலிடவில்லை. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களைத் தீர்ப்பு எழுதுவதற்குப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம்... இனி எப்போது தீர்ப்பை எழுதுவது? இந்த வாரமும் தீர்ப்பு எழுத முடியாது போலிருக்கிறதே," என்று தலைமை நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.