
சினிமா துறையிலும் கருப்பு பணம் புழங்குவதை தடுத்து, ஒழிக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா மாநிலம், பனாஜியில் நேற்று நடந்தது. இந்த விழாவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது.
எல்லா இடங்களிலும் கருப்புப் பணம் புழங்குகிறது. இந்த சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அரசியலிலும், பொது வாழ்விலும், சினிமாவிலும் கருப்புப் பணம் புழங்குகிறது. நாம் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும். சிறப்பான எதிர்காலத்தை பெற வேண்டும். இதற்கு, இந்த கருப்பு பண புழக்கத்தை ஒழித்தே தீர வேண்டும்.
பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை, திரைத்துறைக்கும் சிறப்பு சேர்க்கும். ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டவுடன் முதல் ஆதரவு குரல் திரைத்துறையில் இருந்து வந்ததை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
மோடியின் கருப்புப் பண நடவடிக்கை வெற்றியடைந்துவிட்டது. நியாயமாக சேர்த்த பணத்தை (வெள்ளைப் பணம்) வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே நன்றாக உறங்குவார்கள். ஆனால், கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக உறங்க முடியாமல் இருப்பதையும், வெளிப்படையாக புலம்புவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே, நாட்டைத் தூய்மையாக்கும் பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.