ஒமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான், மெல்ல மெல்ல பிற நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியா உள்பட 106 நாடுகளில் ஒமிக்ரான் பரவி விட்டது. கடந்த 2ம் தேதி முதல்முறையாக கர்நாடகாவில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் தென்பட்டது. தற்போது 269 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டா வைரஸை விட வேகமாகப் பரவக் கூடியது என்பதால், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
undefined
இருப்பினும், தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒமிக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மிக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தவிதத்தில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் இருக்கக் கூடாது. பண்டிகைகள் வர உள்ள நிலையில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலங்கள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலத்துவதே இந்த தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை 334 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 88, டெல்லியில் 64, தமிழ்நாட்டில் 31, கர்நாடகத்தில் 31 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துதல், பூஸ்டர் டோஸ், ஒமிக்ரான் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா? பொது இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விரைவில் அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.