
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.
ஒரே மாதத்தில் மட்டும் இந்தியா உள்பட 106 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200ஐ கடந்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் இதுவரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், தமிழகம், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், இரவு நேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு கூறுகையில், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மிக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவிதத்தில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் இருக்கக் கூடாது. பண்டிகைகள் வர உள்ள நிலையில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலங்கள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலத்துவதே இந்த தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.