பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள்!

Published : Dec 25, 2023, 09:28 PM IST
பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள்!

சுருக்கம்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு அவருக்கு நன்றி தெரிவித்த கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்கள் அவரது தொலைநோக்கு பார்வையை பாராட்டியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவ சமூகத்தினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமிருந்து கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்திய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல் மற்றும் மும்பை பேராயரும் போப்பின் கார்டினல் ஆலோசகர்கள் குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான ஆஸ்வால்ட் கிரேசியாஸ், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய கார்டினல் ஆஸ்வால்ட் கிரேசியாஸ், மற்றவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது குறித்து இயேசு கிறிஸ்துவின் போதனைகளுடன் ஒப்பிடுகையில், நல்லாட்சிக்கான அவரது ஆர்வத்தைப் பற்றியும் பேசினார். இந்த நாடு, கிறிஸ்தவ சமூகம் மற்றும் உலகத்திற்காக பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆஸ்வால்ட் கிரேசியாஸ் நன்றி தெரிவித்தார் பிரதமரின் கருத்துக்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் பரவி வருவதாகவும், நமது நாடு உலகின் முன்னணி நாடாக இருக்க முடியும் என்றும் கார்டினல் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் கூறினார்.

புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கணை அஞ்சு பாபி ஜார்ஜ், தனது நீண்ட விளையாட்டு வாழ்க்கையின் மாற்றத்தை குறிப்பிட்டார். அவர் தனது காலத்தில் இருந்த நிலையையும், இன்றைய விளையாட்டு வீரர்களின் சாதனைகளை நாடும் தலைமையும் எவ்வாறு கொண்டாடுகிறது என்பதையும் நினைவு கூர்ந்தார். கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா மூலம், விளையாட்டு பற்றி பேசப்படுவதையும், இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய மாற்றத்திற்கு காரணமான பிரதமரின் தலைமையை அவர் பாராட்டினார். 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு தனது மகிழ்ச்சியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

 

 

வட இந்திய தேவாலயம், டெல்லி மறைமாவட்டத்தின் பிஷப் ரெவ். டாக்டர் பால் ஸ்வரூப், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வருகை தந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மக்களுக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகங்களை எடுத்துரைத்த அவர், சமூகம் மற்றும் மக்களுக்கான பிரதமரின் முயற்சிகளை அதனுடன் ஒப்பிட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமருக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை பெருமையுடன் அங்கீகரிக்கும் இந்தியா: பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் ஜான் வர்கீஸ், கல்விச் சமூகத்தின் பிரதிநிதியாக, புதிய தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பிற கொள்கைகளிலும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றைப் பாராட்டினார். உயர் கல்வியைப் பொறுத்தவரை, வளங்களைப் பகிர்ந்து கொள்வதையும், உயர்தர கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி வழங்குவதையும் அவர் பாராட்டினார்.

ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உலகளாவிய தெற்கின் குரலாக விளங்கியதற்காக பிரதமரை அவர் பாராட்டினார். கல்லூரி சேப்பலில் நேற்றிரவு நடந்த ஆராதனையில், பிரதமருக்கான பிரார்த்தனை நடந்ததாக அவர் தெரிவித்தார். உலகின் மிகப் பழமையான மொழியின் மீது பிரதமரின் அன்பைக் குறிப்பிட்ட ஜான் வர்கீஸ், பிரதமருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தமிழில் தனது கருத்துக்களை முடித்தார்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தம்முடன் உரையாடல் மற்றும் கலந்துரையாடலில் ஈடுபட வாய்ப்பளித்தமைக்காக ஆயர் தாமஸ் மார் அந்தோனியோஸ் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். சப்கா சாத் சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிரயாஸ் என்ற மந்திரத்துடன், பிரதமர் நமது நாட்டிற்கு உலக அரங்கில் தலைமை தாங்குகிறார் என்று பேராயர் அனில் குடோ மகிழ்ச்சி தெரிவித்தார்.

முத்தூட் குழுமத்தின் எம்.டி., அலெக்சாண்டர் ஜார்ஜ், தேசத்தின் மாற்றத்தில் பிரதமரின் முக்கிய பங்கை, கிறிஸ்தவ சமூகம் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும், சிறந்த எதிர்காலத்திற்கான வாக்குறுதியையும் எடுத்துக்காட்டினார். அதேபோல், ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஆலுக்காஸ் ஜாய் வர்கீஸ், பிரதமரின் எளிமையான மற்றும் நட்பான ஆளுமையைப் பாராட்டினார்.

பஹ்ரைனைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் குரியன் வர்கீஸ், வளைகுடா நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்தியாவுக்கு நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்க பிரதமரின் முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமரின் பங்களிப்பை பாராட்டிய நடிகர் டினோ மோரியா, நாடு தனது மக்களுடன் சேர்ந்து சரியான திசையில் செல்கிறது என்றார். முதன்முறையாக ஒரு பிரதமர் தனது இல்லத்தில் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாட கிறிஸ்தவ சமூகத்தை அழைத்தது குறித்து பிஷப் சைமன் ஜான் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அப்பல்லோ 24*7 இன் தலைமை நிர்வாக அதிகாரியான அந்தோணி ஜேக்கப், பிரதமரை ஒரு கனிவான மனிதராகப் பார்க்கிறேன் என்றும், கலந்துரையாடல் வாய்ப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி சன்னி ஜோசப், இந்த வாய்ப்பைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் எதிர்காலத்திற்கான பிரதமரின் தொலைநோக்கு பார்வை அனைவரையும் உயர்த்தியுள்ளது என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!