
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) சீட் மறுக்கப்பட்ட விரக்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் அபய் குமார் சிங் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மோர்வா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், விரக்தி அடைந்த அபய் சிங் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிராக் பஸ்வான் கட்சியைச் சேர்ந்த அபய் குமார் சிங், மோர்வா தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடத் தீவிரமாக முயற்சி செய்து வந்தார். ஆனால், கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் மோர்வா தொகுதி ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, இவரது கனவைச் சிதைத்தது.
டிக்கெட் மறுக்கப்பட்ட அதிர்ச்சியால் உணர்ச்சிப் பெருக்கில் வீடியோ வெளியிட்ட அபய் குமார் சிங், குழந்தையைப் போல மனம் உடைந்து அழுதார். அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கண்ணீருடன் பேசிய அவர், டிக்கெட் ஒதுக்கீட்டில் பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாகக் குற்றம் சாட்டினார். "எங்களை விட வேறு யாரோ அதிகப் பணம் கொடுத்ததால், அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. அதனால், இப்போது நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்," என்று மிகுந்த வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
அபய் குமார் சிங் ஏற்கெனவே 2020 சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) வேட்பாளராக மோர்வா தொகுதியில் போட்டியிட்டவர் ஆவார். இந்த முறை என்.டி.ஏ. கூட்டணியில் சிராக் பஸ்வானின் கட்சிக்கு 29 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஆரம்பத்தில் மோர்வா மற்றும் ரோஸ்ரா ஆகிய தொகுதிகளும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த ஒதுக்கீடு குறித்து பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அதிருப்தி தெரிவித்ததாகவும், அதன் விளைவாக மோர்வா தொகுதி ஐக்கிய ஜனதா தளத்துக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. ஜேடியு தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வித்யாசாகர் நிஷாத்தை மோர்வா வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதனால், அரசியல் எதிர்காலம் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அபய் குமார் சிங்கிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவர் தனது விரக்தியை வெளிப்படையாகக் கண்ணீருடன் தெரிவித்திருப்பது பீகார் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.