
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் இன்று ஒரே நாளில் 170-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைத் துறந்து சரணடைந்துள்ளனர். இந்த நாளை நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கியத் திருப்புமுனை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
"ஒரு காலத்தில் பயங்கரவாத மையங்களாக இருந்த சத்தீஸ்கரின் அபூஜ்மத் மற்றும் வடக்குப் பஸ்தர் பகுதிகள், இன்று நக்சல் பயங்கரவாதம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன," என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களில் நேற்று 78 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். புதன்கிழமை மகாராஷ்டிராவில் 61 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இதன் மூலம், கடந்த இரு நாட்களில் மட்டும் மொத்தம் 258 ஆயுதமேந்திய நக்சல்கள் வன்முறையைக் கைவிட்டு சரண் அடைந்துள்ளனர்.
பா.ஜ.க அரசு 2024 ஜனவரியில் சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது முதல், இதுவரை 2,100 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர், 1,785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமித் ஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"தற்போது தெற்கு பஸ்தர் பகுதியில் மட்டுமே நக்சலிசத்தின் எச்சம் உள்ளது. அதையும் நமது பாதுகாப்புப் படைகள் விரைவில் ஒழிக்கும்," என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
சரணடைந்தவர்களில், மாவோயிஸ்டுகளின் மூத்த தளபதியான ரூபேஷ் மற்றும் மார்ஹ் பிரிவின் பொறுப்பாளர் ரனிதா ஆகியோர் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ரூபேஷ், மாவோயிஸ்டுகளின் வடமேற்கு துணை மண்டலப் பிரிவின் பொறுப்பாளராக இருந்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியைத் தொடங்கியவர் ஆவார். சமீபத்தில் அவர் நக்சல்களின் மத்தியக் குழு உறுப்பினராகப் பதவி உயர்வு பெற்ற போதிலும், சரணடைய முடிவு செய்துள்ளார்.
"சரணடைய விரும்புபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். தொடர்ந்து ஆயுதமேந்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள், நமது படைகளின் சீற்றத்தைச் சந்திப்பார்கள். 2026 மார்ச் 31-க்குள் நக்சலிசத்தை வேரோடு பிடுங்கி எறிய நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்றும் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சரணடைந்தவர்கள் தங்கள் ஆயுதங்களை அதிகாரபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஜகதல்பூரில் நடைபெற உள்ளது. கான்கர் மற்றும் அபூஜ்மத் பகுதிகள் இப்போது ஆயுதமேந்திய நக்சல்கள் இல்லாத பகுதிகளாகிவிட்டன என்றும், நாராயண்பூர் மற்றும் சுக்மாவும் விரைவில் இதே நிலைக்கு வரும் என்றும் துணை முதலமைச்சர் விஜய் சர்மா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.